ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் வசித்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியதோடு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இந்த கரோனா தொற்றானது சமூக தொற்றாக ஏற்படவில்லை. மேலும் இம்மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகள் மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அதுபோல அனைவரும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் கரோனா தொற்று உள்ளதா என கண்டறிய கூடுதலாக தனியார் இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை இம்மாவட்டத்தில் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: நீலகிரியில் ஒரு வயது குழந்தைக்கு கரோனா