சத்தீஸ்கர் மாநிலம், கொண்டேகான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாங்குபஹேல்; பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சோனாதைல் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து கொண்டேகான் மாவட்ட ஆட்சியரிடம் மாங்குபஹேல் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், கொண்டேகான் பகுதியை சேர்ந்தவர்கள், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. காணாமல் போன சோனாதைல்லும் கொத்தடிமையாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்து ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.,களுக்கு விசாரணை நடத்துவதற்கு அனுமதி கேட்டு சத்தீஸ்கர் காவல்துறையினர் கடிதம் அளித்தனர். இதற்கு அனுமதி கிடைத்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி நான்கு பேர் கொண்ட தனிப்படை ஈரோடு வந்ததது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து வரும் ஏஜெண்டாக செயல்படும் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் தனிப்படை விசாரணை நடத்தியது.
இதில் கிடைத்த தகவலின்பேரில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ மற்றும் மொடக்குறிச்சி தாசில்தார் அஷ்ரப்புனிஷா தலைமையிலான வருவாய்துறை அலுவலர்களுடன், சத்தீஸ்கர் தனிப்படை காவல்துறையினர் தானத்தம்பாளையம், ராட்டை சுற்றிபாளையம், அவல்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அட்டை தயாரிக்கும் ஆலைகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கு வடமாநிலத்தை சேர்ந்த 15 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 26 பேர் கொத்தடிமைகளாக பல ஆண்டுகள் வேலை பார்த்தது தெரியவந்ததது. இவர்களை மீட்ட அரசு அலுவலர்கள், மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். இதில் மாங்குபஹேல் மனைவி சோனாதைல் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சத்தீஸ்கரில் ஒரு பெண் மாயம் என்று ஆரம்பித்த இந்த வழக்கு, தமிழகத்தில் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த வடமாநிலத்தை சேர்ந்த 26 பேர் மீட்பதற்கு உதவியுள்ளது.