கந்த சஷ்டி கவசத்தின் பெருமைகளை விளக்கிக் கூறும் வகையில், ஈரோடு மாவட்ட பாஜகவினர், அந்நகர் முழுவதுமுள்ள மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி வந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டிய சுவரொட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கந்த சஷ்டி கவசத்தின் பெருமைகளை விளக்கிக் கூறிய சுவரொட்டிகளை கிழித்து எறிந்ததைக் கண்டித்து, சூரம்பட்டி நான்கு வழிச் சாலைப் பகுதியில் பாஜகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின்போது இந்து மக்களின் கடவுளான முருகனுக்கு சமர்ப்பிக்கப்படும் கந்த சஷ்டிக் கவசம் இந்து மக்களுக்கு முக்கியமானதொரு பொக்கிஷம் என்றும், சுவரொட்டிகளைக் கிழித்தவர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுவரொட்டிகளைக் கிழித்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இப்போராட்டம் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.