ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்குள்பட்டது புளியங்கோம்பை கிராமம். இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பழங்குடியின மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில் உள்ள வடிகால்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் அசுத்தமடைந்ததோடு துர்நாற்றம் வீசுகிறது.
இதன் காரணமாக வடிகாலில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அதன்மூலம் கிராமத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்டோர் கடந்த ஒருவாரகாலமாக மர்ம காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளனர். கிராமத்தில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள நகராட்சிப் பணியாளர்கள் யாரும் வருவதில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள் கால்வலி, முழங்கால் வலியால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். கடந்த வாரம் இதே பகுதியில் கம்பத்தராயன்புதூர் கிராமத்தில் தொண்டைவலி, கால்வீக்கம், சளி நோயால் அவதிப்பட்டுவந்த நிலையில் அதனருகே உள்ள புளியங்கோம்பைக்கு நோய் பரவியுள்ளது.
நகராட்சிப்பகுதியில் உள்ள பத்தாவது வார்டில் அமைந்துள்ள இக்கிராமம் வனப்பகுதியை ஒட்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அலுவலர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை எனவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
எனவே உடனடியாக புளியங்கோம்பை கிராமத்தில் உள்ள வடிகால்களை சுத்தம்செய்து தூய்மைப்பணிகள் மேற்கொள்வதோடு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படியுங்க: உலகை அச்சுறுத்தும் கரோனா வைரசை அறிவோம்