ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ச.கணபதிபாளையத்தைச் சேர்த்தவர் யுவராஜ். அரிசி வியாபாரியான இவர் ஈரோடு மாவட்ட அமமுக கட்சியின் பேரவைச் செயலாளராக உள்ளார்.
கட்சி நிகழ்ச்சிக்காக தனது காரில் வெளியூர் சென்று வீடு திரும்பிய இவர், தனது காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சற்று நேரத்தில் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதைக் கேட்டு வெளியே வந்தபோது, வீட்டின் முன்னிருந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் வீட்டின் முன் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.