ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட வேட்டுவன்புதூரைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது வீட்டருகே உள்ள தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும் ஆடு, மாடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, தோட்டத்திலேயே கட்டி வைத்திருப்பார். இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல ஆடு, மாடுகளை கட்டி வைத்துவிட்டு ரவி வீடு திரும்பினார்.
மறுநாள் காலை சென்று பார்த்தபோது 11 ஆடுகளை ஏதோ மிருகம் கடித்துக் குதறி கொன்றிருந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார். தகவலறிந்து வந்த வனச்சரகர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பதிவாகியிருந்த கால்தடங்களை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால்தடங்கள் என்பது உறுதியானது.
இதனையடுத்து சிறுத்தையைப் பிடிக்க, அப்பகுதியில் 4 கேமராக்களை வைத்து கண்காணித்தனர். ஆடுகளைக் கொன்று பழகிய சிறுத்தை மீண்டும் அதே இடத்திற்கு வந்தது தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நள்ளிரவில் சிறுத்தை ஊருக்குள் உலவுவதை அறிந்த பொதுமக்கள் உயிர் பயத்தில் உறைந்துள்ளனர்.