ஈரோடு: சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த நடேசன் ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் தங்கி ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் கடந்த 2008 ம் ஆண்டு சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், 84 லட்சம் ரூபாய் ரொக்க பணம் உட்பட கணக்கில் வராத 2 கோடியே 6 லட்சம் ரூபாய் சொத்துக்களை கண்டு பிடித்தனர்.
இது தொடர்பாக நடேசன் அவரது மனைவி கல்லூரி பேராசிரியை மல்லிகா இருவர் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை முடிவில் இன்று(நவம்பர் 29) ஈரோடு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தம்பதியினர் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.
மேலும் தலா 50 லட்சம் ரூபாய் வீதம் 1 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இவர்களின் மகள் மற்றும் மகன் இருவரும் மருத்துவர்களாக உள்ளனர். 2014 ல் ஓய்வு பெற வேண்டிய நடேசன், வழக்கு விசாரணையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தீர்ப்பை தொடர்ந்து இருவரும் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.