சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடி வழியாக கரும்பு பாரம் ஏற்றும் லாரிகள் சர்க்கரை ஆலைக்கு செல்கின்றன. அதிக பாரமான கரும்புகளை லாரி ஓட்டுநர்கள் சோதனைச் சாவடியில் கீழே இறக்கி சாலையோரம் போராடுகின்றனர்.
இதனை சாப்பிட தினந்தோறும் யானைகள் வருகின்றன. நேற்றிரவு(செப் 22) வந்த யானை ஒன்று கரும்பு லாரியை எதிர்ப்பார்த்து காத்திருந்தது. கரும்பு பாரம் இல்லாததால் லாரியை பின் தொடர்ந்து யானை செல்ல ஆரம்பித்தது.
கர்நாடகாவிலிருந்து வந்த லாரிகள் வரிசையாக அணிவகுத்து நின்றன. ஆனால் யானை சாலையின் குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திக்கொண்டன. வாகனத்தை இயக்க முடியாமல் திணறினர்.
லாரி, காவல் சோதனைச்சாவடியை தாண்டி பண்ணாரி கோயில் வளாகம்வரை சென்றது. இதனால் அங்கு நின்றுகொண்டிருந்த பக்தர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். மீண்டும் யானை சோதனைச்சாவடி அருகே வந்து நீண்ட நேரம் அங்கும் இங்குமாக திரிந்தது. அங்கு நின்று கொண்டிருந்த பணியாளர்கள் சத்தம் எழுப்பி யானையை துரத்தினர். சுமார் 2 மணி நேரம் தொந்தரவு செய்த யானை பின்னர் காட்டுக்குள் சென்றது.
அதேசமயம் எப்போதும் இதேபோல் கரும்பு சர்க்கரை திருடுவது, நின்று கொண்டிருக்கும் லாரிகளிலிருந்து கரும்பை எடுத்து உண்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன இந்த யானைகள். தினந்தோறும் இதன் அட்டகாசத்தில் காவல், போக்குவரத்து, வனத்துறை ஊழியர்கள் பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். கரும்பு லாரிகளை கட்டுப்படுத்தினால் யானைகளின் அட்டகாசம் குறையும் என தெரிவித்தனர்.