ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த யானைகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் பகல்நேரங்களில் நின்றபடி தீவனம் உட்கொள்வதோடு அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து மகிழ்வதோடு செல்போனில் புகைப்படம், வீடியோ எடுக்க முயற்சிக்கின்றனர். இந்நிலையில் சிலர் யானைகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதால் யானைகள் வாகன ஓட்டிகளை கண்டு ஆத்திரமடைந்து துரத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலம் தமிழக - கர்நாடக எல்லையான காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே சாலையில் குட்டியுடன் 2 யானைகள் நடந்து சென்றன. அப்போது இருசக்கர வாகனத்தில் அவ்வாழியில் சென்ற இளைஞர்கள் சிலர் யானைகளை சொல்போனில் படம் எடுக்க முயற்சித்தனர். குட்டியுடன் இருந்த 2 யானைகள் திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை ஆத்திரத்துடன் துரத்தின. இதையறிந்த இளைஞர்கள் வாகனத்தை வேகமாக இயக்கி யானைகளிடமிருந்து தப்பித்தனர். இந்த காட்சி அவர்களது செல்போனில் பதிவாகியுள்ளது.
சாலையோரம் தீவனம் உட்கொள்ள வரும் யானைகளையும், சாலையை கடக்கும் யானைகளையும் வாகன ஓட்டிகள் அருகே சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.