சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உட்பட்ட தாளவாடி வனக்கோட்டம் முதியனூரைச் சேர்ந்தவர் மாதேவன். வனத்தையொட்டியுள்ள இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். இங்கு காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் தோட்டத்துக்குள் புகுந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வந்ததால், அதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்துப் பாதுகாத்து வந்துள்ளார்.
இந்நிலையில், வனத்திலிருந்து தீவனம் தேடி வெளியே வந்த 55 வயதுள்ள பெண்யானை, மாதேவன் தோட்டத்தில் புகுந்தது. அப்போது அங்கு அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய பெண் யானை, பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மின்கம்பத்திலிருந்து மின்சாரம் திருடப்பட்டு மின்வேலியில் செலுத்தப்பட்டதா என்பது குறித்து மாதேவனிடம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க...'திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மத்திய அரசும் செயல்படுகிறது' - மு.க.ஸ்டாலின்