ஈரோடு மாவட்டம், ஆசனூர் புலிகள் காப்பகம் தாளவாடி அடுத்த ஜீரஹள்ளி வனச்சரகத்தில் உள்ள கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன.
யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு விவசாயிகள் தோட்டத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில் திகினாரை கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை அப்பகுதியில் உள்ள விவசாயி ரங்கசாமி என்பவரது விளைநிலத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளப் பயிரை தின்பதற்காக தோட்டத்திற்குள் புக முயற்சித்தது.
அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 20 வயதுள்ள அந்தப் பெண் யானை உயிரிழந்தது. இச்சம்பவமறிந்து அங்கு வந்த வனத் துறையினர் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்ததை உறுதிபடுத்தினர். இது குறித்து வனத்துறையினர் விவசாயி ரங்கசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையில் யானையின் உடல் அதே இடத்தில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விவசாயி ரங்கசாமியை வனத் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: குன்னூரில் காயத்துடன் சுற்றிய காட்டெருமை உயிரிழப்பு