ஜீரஹள்ளி வனச்சரகத்திக்கு உள்பட்ட கரளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகாதேவபிரசாத். இவர், தனது விவசாய நிலத்தில் முட்டை கோஸ், வாழை ஆகியவற்றைப் பயிரிட்டிருந்தார். இந்நிலையில், கரளவாடி வனப்பகுதியிலிருந்து வந்த ஏழு காட்டு யானைகள் அவருடைய விளைநிலங்களிலில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த முட்டை கோஸை மிதித்தும் தின்றும் நாசம் செய்தன.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்த தென்னை மரங்களையும் முறித்து சேதப்படுத்தின. தோட்டத்தில் யானைகள் தஞ்சம் புகுந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் ஒன்றுதிரண்டு பட்டாசு வெடித்தும் தீ பந்தம் காட்டியும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ச்சியாக பயிர்களை நாசம் செய்தன. கிராம மக்கள் மற்றும் வனத்துறையினரின் தொடர் முயற்சியால் 3 மணி நேரப் போராட்டத்திக்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. யானை விளைநிலங்களில் புகுந்ததில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த முட்டைகோஸ், 20 தென்னை மரங்கள் மற்றும் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் உள்ளிட்டவை நாசமாயின.
தாளவாடி மலைப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மிகுந்த வேதனையடையும் விவசாயிகள், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’அது ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்து; கட்சியின் கருத்து அல்ல’ - அமைச்சர் ஜெயக்குமார்