ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், துறையம்பாளையம், கொங்கர்பாளையம், வினோபாநகர் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வாகனத்தில் நின்று பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, தமிழ்நாடு அரசு ஊராட்சிகளுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளதாகவும், அதுபோல் ஊராட்சிகளில் மேன்மேலும் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற வேண்டுமெனில் அதிமுக சார்பில் போட்டிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் எடுத்துரைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கை பொருத்தவரை தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அந்நிய முதலீடு ஈட்டி 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 72 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கரும்பலகைகள் அமைக்கவும் 7500 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளும் 750 பள்ளிகளில் அட்டல் டிக்கர் லேப் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்கு செல்லும் இடங்களில் மக்கள் ஆரவாரமாக வரவேற்பதாகவும் இந்த செயல்கள் அரசின் நல்மதிப்பை காட்டுவதாகவும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக அமோக வெற்றி பெரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: