உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது இந்தியாவில் ஊடுருவி தற்போது தமிழ்நாட்டில் இதன் தாக்கம் எதிரொலித்துவருகிறது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசானது ஊரடங்கை அறிவித்தது.
அதன்படி நாள்தோறும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப்ரல் 25) முழு ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஈரோடு பேருந்து நிலையம், முக்கியச் சாலைகளான மேட்டூர் சாலை, பன்னீர்செல்வம் பூங்கா சாலை, பெருந்துறை சாலை, ஈரோடு சத்தி சாலை, ரயில் நிலைய சாலை ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் வஉசி பூங்காவில் பெரிய சந்தையில் செயல்பட்டுவந்த 500-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள், 50-க்கும் மேற்பட்ட பழக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் சந்தையும், இறைச்சிக் கடைகளும், மதுபான கடைகளும் மூடப்பட்டிருந்தன.
ஆனால் அத்தியாவசிய பொருள்களைக் கொண்டுசெல்லும் வாகனம், பால், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் வழக்கம்போல் செயல்பட்டன. அதேபோல் பெட்ரோல் சேமிப்பு நிலையங்களும் செயல்பட்டன.
அம்மா உணவகத்தில் பார்சல் உணவு மட்டும் வழங்கப்பட்டது. இதேபோல் மற்ற உணவகங்கள் வழக்கம்போல் இயங்கினாலும் பார்சலில் மட்டும் உணவு வழங்கப்படுகிறது.
மேலும் முழு ஊரடங்கில் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.