ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம் ஆகிய இரு வனப்பகுதிகளிலும் சுமார் 220 பாறு கழுகுகள் இருக்கின்றன. வனப்பகுதியிலுள்ள இறந்த விலங்குகளையும் அருகிலிருக்கும் ஏரி, குளங்களிலுள்ள மீன்களையும் தின்று உயிர் வாழும் இவை சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், கல்லாம்பாளையம் வனப்பகுதியிலுள்ள உயரமான மரங்கள், பாறை இடுக்குகளில் வாழ்கின்றன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பவானிசாகர் வனப்பகுதியில் இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழுகுகள் இருந்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர். ஆனால் தற்போது இவை 220 குறைந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பாறு கழுகுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது அழிந்துவரும் பறவை இன பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே பாறு கழுகுகளை பாதுகாக்கும் நோக்குடன் பவானிசாகர் சுஜில்குட்டை, கல்லாம்பாளையம் ஆகிய இடங்களிலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கழுகுகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கழுகுகள் வாழும் இடங்களுக்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்று ஓவியப்போட்டி, கைப்பந்து, கட்டுரைப் போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. அவ்வப்போது இந்நிறுவனங்கள் கழுகுகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்குகளையும் நடத்திவருகின்றன.