தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கூட்டம் கூடாமல் இருப்பது, உள்ளிட்ட விதிகளைக் கடைபிடிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த வழிபாட்டுத் தலங்களிலும் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே முன்னதாக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய கரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து கோயில்களும் நேற்று (ஏப்.16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன் ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் கிராமத்திலுள்ள பழமையான சந்திர பிரபா தீர்த்தங்கரர் சமண கோயில், நேற்று (ஏப்.16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து கோயில் வாளகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், கரோனா பரவல் காரணமாக பக்தர்கள், பொதுமக்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், வழக்கமான பூஜைகள் நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கும்பமேளா ஏன் இன்னும் நிறுத்தப்படவில்லை?