ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மலைக்கிராமங்களில் கிராமப்புற அஞ்சலங்கள் செயல்படுகின்றன. இதில், அருள்வாடி கிராமப்புற அஞ்சலக ஊழியராக ராஜேஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சில மாதங்களாக மதுபோதையில் பணியாற்றுவதகாக புகார் எழுந்தது.
இந்நிலையில், சில தினங்களாக போதை தலைக்கேறிய நிலையில் அருள்வாடி அஞ்சலகத்தில் இவர் தூங்கும் வீடியோவை அக்கிராம மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அருள்வாடி பகுதியில் உள்ள மல்லன் குழி,சொத்தன்புரம், ஒங்கன்புரம், மல்லன்குழி பகுதி மலைக்கிராம மக்களுக்கு வரும் விரைவு அஞ்சல், பதிவு தபால்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு கடிதங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாரத்தில் இரு தினங்கள் மட்டுமே அஞ்சலகம் திறக்கப்படுவதாகவும், இது குறித்து அஞ்சலக உயர் அலுவலர்களிடம் முறையாக புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதனால், சில தினங்களுக்கு முன் அஞ்சலக ஊழியர் மதுபோதையில் அலுவலகத்தில் தூங்கும் காட்சியை பதிவிட்ட மக்கள், அதை அஞ்சலக கோட்ட அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளனர். போதை ஆசாமியை மாற்றி, புதிய ஊழியரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!