ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு, சத்தியமங்கலம் நகர்ப் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வழியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நகர்ப்பகுதி முழுவதும் குடிநீர் பைப்லைன்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சத்தியமங்கலம் மணிக்கூண்டு அருகே மைசூர் டிரங்க் ரோட்டில், சாலையின் நடுவே திடீரென பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்தது. சாலையில் குடிநீர் திடீரென ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இது தொடர்பாக உடனடியாக சத்தியமங்கலம் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக நீரேற்று நிலையத்தில் இயங்கிய மின் மோட்டார் நிறுத்தப்பட்டு, பைப் லைனிலிருந்து குடிநீர் வெளியேறுவது படிப்படியாக நிறுத்தப்பட்டது. சாலையின் நடுவே பைப்லைன் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பைப்லைன் உடைப்பை சரி செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு தண்ணீர் வீணாவதைத் தடுத்தனர். மேலும், பழுதுபார்க்கும் பணியால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.