ஈரோடு: தமிழகத்தில் மாணவ மாணவிகளின் உயிரிழப்பிற்கு காரணமாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு சி.என்.சி கல்லூரி எதிரே தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக இளைஞரணி, மருத்துவரணி மற்றும் மாணவர் அணியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நீட் தேர்வினால் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து திமுக நிர்வாகிகள் பலர் பேசினர். இதனையடுத்து மாலையில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்து, பழரசத்தை வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி; "நீட் தேர்வால் தமிழக மாணவ மாணவிகள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். அதேபோல் மாநில உரிமை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழக முதலமைச்சர் நீட் தேர்விற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பிரதமரிடம் பேசி உள்ள நிலையிலும் மத்திய அரசு விடுவதாக இல்லை என்றார். நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் தவறான கருத்துக்களை பேசி வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சித் தமிழர்' பட்டம் முதல்.. 32 தீர்மானங்கள் வரை.. அதிமுக மதுரை மாநாடு அப்டேட்!
இதில் ஆளுநர் மாநில அரசுடன் ஒத்துப்போக வேண்டும், ஆனால் இதற்கு மாறான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது எனக் கூறினார். இந்த உண்ணாவிரதம் அரசியல் நோக்கத்திற்கானது அல்ல என்றும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கானதாகும் என்று தெரிவித்தார். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் உரிமையை ஒப்படைப்பார்கள் என நம்புகிறோம் என்றார்.
இதன் அடுத்தக்கட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்கொள்வார் என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டமன்றத்தில் விவாதித்து அதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் கூறினார். நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் முக்கியமான நோக்கம் என்றும் குடியரசுத் தலைவரிடம் மசோதா சென்றுள்ள நிலையில் எங்கிருந்து செல்கிறதோ அங்கு தான் வலியுறுத்த வேண்டும்" என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆளுநர் ரவியே நீங்கள் யார்..?" - நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிர மேடையில் கர்ஜித்த உதயநிதி!