ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட மூன்றாவது வீதி பகுதியான கல்யாண சுந்தரம் வீதியில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில் கடந்த சில நாள்களாக தரமற்ற அரிசி வழங்கப்பட்டு வருவதாகவும், தரமற்ற அரிசிக்குப் பதிலாக தரமான அரிசியை வழங்கிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேபோல் ஊரடங்கு உத்தரவையடுத்து தமிழ்நாடு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழக்கம்போல் வழங்கபடுவதைக் காட்டிலும், கூடுதலாக 5 கிலோ சேர்த்து 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் நியாய விலைக் கடையில் அரசு அறிவித்ததற்கு மாற்றாக 19 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது.
இது குறித்து கேட்டால், அவர்களுக்கு இதுபோன்ற கருப்பு அரிசிதான் வழங்கப்பட்டுள்ளதாகவும், 10 கிலோ அரிசி மட்டுமே வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அரிசியை வாங்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, நியாய விலைக் கடைக்கு வந்த குடியுரிமை வட்டாட்சியர் எவ்வித பதிலும் கூறாமல் வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளவும், இல்லையென்றால் வீணாக தகராறு செய்யாமல் சென்று விடுங்கள் என்று முறையற்ற பதிலைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு தரமான அரிசியை வழங்கிட வேண்டும் என்றும்,
அரசு அறிவித்ததைப் போல் 25 கிலோ அரிசி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வழங்கப்பட்ட அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் வந்த குடியுரிமை வட்டாட்சியர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதையும் படிங்க: எவன்டா அது... அடச் சீ கம்முனு இரும்மா... மக்களை தரக்குறைவாக திட்டிய வட்டாட்சியர்!