தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுபான பிரியர்கள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். இதனால் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துவருகிறது.
அந்த வகையில் பெரியகள்ளிப்பட்டியில் வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் சாராய ஊறல் போட்டு கள்ளச்சாராயம் தயாரிப்பதாக மதுவிலக்கு உதவி ஆய்வாளர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், அவரது தலைமையில் மதுவிலங்கு காவல் துறை அங்கு சென்று ஆய்வுசெய்தது.
அப்போது, கோட்டைப்புதூர் புதர்மறைவில் நெகிழி பேரலில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு, மண்ணில் புதைக்கப்பட்டிருந்ததைப் பறிமுதல்செய்தனர்.
இது தொடர்பாகக் காவல் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமியை கைதுசெய்து, அதே இடத்தில் கள்ளச்சாராயத்தை அழித்தனர்.
மேலும் கைதான பழனிச்சாமியை சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காதலனின் பிறந்தநாளில் தற்கொலை செய்துகொண்ட பெண் காவலர்