தமிழ்நாடு-கர்நாடக எல்லையான ராமபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையின் மாநில எல்லை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. தமிழில் வைக்கப்பட்ட இந்த பெயர் பலகையை கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று சேதப்படுத்தினர்.
![சர்ச்சைக்குரிய இடத்தை ஆய்வு செய்யும் அரசு அலுவலர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-02-sathy-vattal-issue-vis-tn10009_11012021192531_1101f_1610373331_713.jpg)
கன்னட மாநில எல்லைக்குள் தமிழ் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றதாக கன்னட அமைப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோட்டாட்சியர் ஜெயராம், சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா ஆகியோர் மாநில எல்லையான ராமபுரத்துக்கு சென்று சம்பவம் நடந்த சர்ச்சைக்குரிய இடத்தை ஆய்வு செய்தனர்.
![வரைப்படத்தை ஆய்வு செய்யும் அலுலவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-02-sathy-vattal-issue-vis-tn10009_11012021192531_1101f_1610373331_723.jpg)
அதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் நில அளவை துறையினர் அளவீடு செய்து மாநில எல்லையை குறியீடு செய்து எல்லையை நிர்ணயம் செய்தனர். மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பலகை வைக்கப்பட்ட இடம் கர்நாடக எல்லைக்குள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு அரசின் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தாளவாடி காவல் நிலையத்தில் வட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.