கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தினசரி காய்கறி சந்தையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவருகின்றனர்.
காய்கறி சந்தை அமைந்துள்ள இடம் நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் சந்தையை இட வசதியுள்ள பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து உடனடி நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து இன்று முதல் தினசரி காய்கறி சந்தை கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை முதல் தினசரி காய்கறி சந்தை செயல்படத் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு கடைக்கு முன்பும் நகராட்சி சார்பில் ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளது. அதில் நின்று மக்கள் ஒருவரை ஒருவர் உரசாமல் காய்கறிகள் வாங்கிச்செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் இதனை கடைப்பிடித்து வட்டங்களில் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்லுமாறும், கரோனா தடுப்பில் அரசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இந்தப் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க... இறைச்சி வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்