தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்து இரண்டு மாதங்களாக நடைமுறையிலிருந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து 11ஆவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று (செப். 6) எவ்வித கட்டுப்பாடுமின்றி வியாபார நிறுவனங்கள் திறக்கப்பட்டு, வியாபாரம் சுறுசுறுப்புடன் நடைபெற்றது.
கிறிஸ்துவ மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ மத வழிபாட்டுத் தலங்கள் திருப்பாலியுடன் தொடங்கின. பொது போக்குவரத்துக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாததால் வழக்கமான ஞாயிற்றுக்கிழமையாக ஈரோடு நகரம் திரும்பி இருந்தது.
கரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து இரண்டு மாதங்களில் வந்த 10 ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சிறிய கடைகள் முதல் பெரிய வியாபார நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாத இறுதியில் செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருந்துவந்த முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதனால் இம்மாதத்தின் தொடக்கம் முதலே ஈரோடு மாவட்டத்தில் சிறிய விற்பனைக் கடைகள் முதல் பெரிய வியாபார நிறுவனங்கள் வரை திறக்கப்பட்டிருந்தன.
இறைச்சிக்கடைகள், தேநீர் விற்பனை நிலையங்கள், அடுமனை (பேக்கரி), உணவகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் என அதிகாலை முதல் இயங்கும் கடைகள் வழக்கம்போல் இயங்கின.
இதேபோல் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் அனைத்து வகை கடைகளும் திறந்திருந்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், கூட்டம் அலைமோதின.
இதையும் படிங்க: கரோனாவால் கலையிழந்த ஜல்லிக்கட்டு; மீண்டும் வாடிவாசலை நோக்கி காத்திருக்கும் காளை வளர்ப்போர்!