ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1988ஆம் ஆண்டு முதல் நீதிமன்றம் இயங்கிவருகிறது. இதில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், நீதித்துறை குற்றவியல் நீதிமன்றம் என மூன்று நீதிமன்றங்கள் உள்ளன. நீதிமன்றத்திற்கென சொந்த கட்டடம் இல்லாததால் தனியாருக்குச் சொந்தமான வாடகை கட்டடத்தில்தான் கடந்த 32 ஆண்டுகாலமாக இந்த நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன.
தற்போது தனியார் திருமண மண்டபத்தில் நீதிமன்றம் செயல்பட்டுவருகிறது. நீதிமன்ற வாடகையாக நீதித்துறை சார்பில் இதுவரை 2.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கென வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் கோபிசெட்டிபாளையம் சாலையிலுள்ள மூன்று ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை நிலம் கையகப்படுத்தும் பணியும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தனியார் கட்டடங்களில் நீதிமன்றம் செய்படுவதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் அவதிப்பட்டுவருகின்றனர். எனவே வரும் பிப்ரவரி 14ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடவேண்டும் என்பது வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: பணியின்போது நெஞ்சுவிலி - சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் பணம் திரட்டிய காவலர்கள்