ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையிலுள்ள பூங்காவிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகள் வந்துசெல்கின்றன. தற்போது கரோனா பரவல் காரணமாக பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளுக்கு மட்டும் சென்று இயற்கை காட்சிகளை ரசித்துவருகின்றனர். மேலும், அணையின் குறுக்கே ஓடும் பவானி ஆற்றுப் பாலத்தில் நின்று அணையின் முகப்புப் பகுதியில் புகைப்படம் எடுத்துவருகின்றனர்.
தற்போது பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் ஆற்றில் தண்ணீர் வேகமாகச் செல்கிறது. இந்நிலையில், திருமணமான தம்பதியினர் ஆபத்தை உணராமல் பவானி ஆற்றில் நின்று போட்டோ ஷூட் எடுத்துவருகின்றனர். மேலும், புகைப்பட கலைஞரும், புதுமண தம்பதியை தண்ணீரில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துவருகின்றனர்.
அணை முன்புள்ள பழைய பாலம் பழுதடைந்துவிட்டதால் புதியதாக பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக பவானி ஆற்றங்கரையில் குழி தோண்டப்பட்டுள்ளது. இதனையறியாமல் ஆற்றில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளும், செல்ஃபி எடுக்கும் தம்பதியினரும் விபத்தில் சிக்கி உயிரிழக்க வாய்ப்புள்ளது.
இதனால், விபத்து நிகழ்வதற்கு முன்பாக காவல் துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போட்டோ ஷூட் எடுக்கவரும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கௌடண்யா ஆற்றில் மூழ்கி தாய், இரு மகள்கள் உயிரிழப்பு !