ஈரோடு மாவட்டம், தாண்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதி ராமசாமி, சசிகலா.
இவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு தங்களுக்கு சொந்தமான 8 சென்ட் நிலத்தில் வீடு கட்டியுள்ளனர்.
அவர்களது வீட்டருகே தோட்டம் வைத்துள்ள குருசாமி என்பவர் தன்னுடைய இரண்டு அடி நிலத்தையும் சேர்த்து,அத்தம்பதி வீடு கட்டியுள்ளதாகவும், அதனை இடிக்கக் கோரியும் கூறிவந்துள்ளார்.
இதுகுறித்து தம்பதி மாவட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 5) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தம்பதி வந்தனர். மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, தனது காரில் ஏறி புறப்படும் சமயம், தம்பதி தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயினை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
உடனே தம்பதியை மாவட்ட ஆட்சியரின் பாதுகாவலர் காப்பாற்றினார்.
மாவட்ட ஆட்சியரிடம் தம்பதி, தங்களது பிரச்னையை சரிசெய்யும்படி கோரிக்கை வைத்தனர். பின்னர் காவல் துறையினர் தம்பதியை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4,862 பேருக்குக் கரோனா பாதிப்பு