ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, காவிலிபாளையம், பெரியூர், உக்கரம், அரசூர், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது பருத்திக்காய்கள் வெடித்து, பஞ்சு எடுக்கப்பட்டு விற்பனைக்காக சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்துவருகின்றனர்.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பருத்தி கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை மட்டுமே ஏலம் போனதால் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவுச் சங்க ஊழியர்கள், வியாபாரிகளுடன் சிண்டிகேட் அமைத்துவிட்டனர் என குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து ஏலம் ரத்து செய்யப்பட்டு இன்று விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இன்று ஒரு கிலோ பருத்தி ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனையானது. மொத்தமாக ஆறாயிரம் பருத்தி மூட்டை ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.