ஈரோடு அருகேயுள்ள கொல்லம்பாளையம் தாயுமானசுந்தரம் வீதியில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கரோனா நோய்ப்பரவல் மற்றும் ஊரடங்குக்கு பிறகு மாநகராட்சித் துறையினர் இப்பகுதியில் முறையாக குப்பைகளை எடுத்துச் செல்வதில்லையென்றும், சாக்கடைக் கழிவு நீரை சுத்தம் செய்வதில்லையென்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து மாநகராட்சி துறையினருக்கு புகார் தெரிவித்து வந்தனர்.
சாக்கடைக் கழிவு நீரை சுத்தம் செய்யாததால் மொத்தமாக சாக்கடையில் அடைத்துக் கொண்டு வெளியேற முடியாமல் அளவுக்கதிகமாக சேதாரமாகி குடிநீருக்காகப் பொருத்தப்பட்டுள்ள குழாய்களுக்குள் சாக்கடை கழிவு நீர் கலப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுத்தமான குடிநீர் வருவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், இந்த கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் செவி மடுக்காததால் அப்பகுதி மக்கள் சிலர் சேர்ந்து தங்கள் பகுதி மக்களிடம் வசூல் செய்த தொகையைக் கொண்டு அவர்களாகவே சாக்கடை கழிவு நீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து அதன் மூலம் சாக்கடை கழிவு நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டதுடன், சாக்கடையில் அடைத்துள்ள அனைத்து வகை குப்பைகளையும் அகற்றி சாக்கடையை சுத்தம் செய்தனர்.