ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக கரோனா நோய்ப்பரவல் முன்பைக் காட்டிலும் குறைந்துவருவதுடன் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள கருமாண்டாம்பாளையத்தில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த ஏழு பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் கருமாண்டாம்பாளையத்தில் செயல்பட்டுவந்த சிறு வணிக நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையிலுமான 50-க்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்கள் மூன்று நாள்களுக்குச் செயல்பட மாவட்ட சுகாதாரத் துறை தடைவிதித்துள்ளது.
மேலும் ஒரேநாளில் ஏழு நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் நோய்ப்பரவல் நடவடிக்கைகள் வீதி வீதியாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருவதுடன் அப்பகுதி முழுவதும் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் கருமாண்டம்பாளையம் பகுதி மாவட்ட சுகாதாரத் துறை, காவல் துறையினர் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
நோய்ப்பரவாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கருமாண்டாம்பாளையம் பகுதி மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களும் சுகாதாரத் துறை, மருத்துவத் துறையினரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.