இன்று(மே.24) முதல் அமலுக்கு வந்த தளர்வில்லா முழு ஊரடங்கில் மருத்துவ தேவை, இறுதிச் சடங்கு மட்டுமே அனுமதி எனவும், மாவட்டம் விட்டு மாவட்டம் வருவோருக்கு இ - பதிவு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் பயணிக்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அதன் படி, காலை 11 மணியளவில் 40 இரு சக்கர வாகனங்களும் 17 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்தனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள இரண்டு மாநில சோதனைச் சாவடிகள் உட்பட 14 நிலையான வாகன சோதனைச் சாவடிகள் மற்றும் தற்காலிகமாக 42 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகர் பகுதியில் கருங்கல்பாளையம், காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, பேருந்து நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், மேட்டூர் ரோடு, சென்னி மலை ரோடு, பெருந்துறை ரோடு, ஜி.ஹெச். ரவுண்டானா, வீரப்பன்சத்திரம், திண்டல் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து, பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 2 ஏடிஎஸ்பி, 9 டிஎஸ்பிக்கள் தலைமையில், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என மாவட்டம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!