ஈரோடு அருகேயுள்ள மணிக்கூண்டு பகுதி கடைவீதி என்பதால் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. மாநகரின் வியாபார மையமாக இருப்பதால் இப்பகுதியில் கட்டடத் தொழிலாளிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் இரவு நேரத்திலும் தங்கியிருப்பது வழக்கம்.
இந்நிலையில், நேற்று (அக்.29) இரவு வழக்கமாக தங்கும் கட்டடத் தொழிலாளிகள் இருவருக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறாக தொடங்கி பின்னர் கைகலப்பாக முற்றியது.
இதில் ஆத்திரமடைந்த தொழிலாளி ஒருவர், வீதியில் கிடந்த காலி மதுபானப் பாட்டிலை உடைத்து மற்றொரு தொழிலாளியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த மாநகர காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய தொழிலாளியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: டிக் டாக் மோகம்: உயிருடன் மீனை விழுங்கிய கட்டட தொழிலாளி உயிரிழப்பு!