ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனியார் அமைப்பின் மூலம் மாவட்டம் முழுவதும் மரங்களை நடுவதும், அதனைப் பராமரிப்பதும், நன்கு வளர்ந்திருந்த மரத்தை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் அமைப்பில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
இவரது வீட்டிற்கு அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெடிந்துயர்ந்த வேப்பமரம் ஒன்று வளர்ந்துள்ளது. இந்த நிலையில், அவரது வீட்டின் அருகே புதிதாக குடிவந்த சண்முகம் என்பவர், வேப்பமரம் தங்களுக்குக் கடும் இடையூராக இருப்பதாகக் கூறி மரத்தை வெட்டுவதற்கு முயற்சித்துதுள்ளார். ஆனால், இதற்கு சக்திவேல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், சக்திவேல் வீட்டில் இல்லாதபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மின்சார இணைப்புக் கம்பிகள் செல்வதற்கு தடையாக இருப்பதாகக் கூறி வேப்பமரத்தை வேரோடு பிடுங்கி விறகுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சக்திவேல், மாவட்டம் முழுவதும் மரம் செடிகளை நட்டு வரும் தனது மரத்தை, அருகாமை வீட்டைச் சேர்ந்தவர் வெட்டிச் சாய்த்துள்ள சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், குடியிருப்புப் பகுதிகளில் இதுபோல் பொய்க்காரணம் கூறி மரங்களை வெட்டும் சண்முகம் போன்றோர்களுக்கு தண்டனையாக மாவட்டம் முழுவதும் ஆயிரம் வேப்ப மரக்கன்றுகளை நட்டு பராமரித்திட உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனுக்கு கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். மேலும், மனுவைப் படித்த ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’அறிவில்லாத அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டவர்கள் நாங்கள்...!'