ஈரோடு: அந்தியூர் ஆலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர், வீரப்பன்சத்திரம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அருகே சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணண் சுரேஷ், மஞ்சள் மண்டி, பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரது தம்பி சேகர் ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ரமேஷ் நேற்று (ஜூலை 21) தனது மனைவி கோகிலா, கை குழந்தையுடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “நான் சிறு வயதிலேயே சரிவர கல்வி கற்காத காரணத்தால் 11 வயதிலிருந்தே சுமை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறேன். எனது தந்தை தங்கவேல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பூர்விக சொத்துக்களை எனது பெயருக்கு எழுதி வைத்தார்.
தகராறு செய்த சகோதரர்கள்
அந்த சொத்திலுள்ள கட்டடத்தினை பழுதுபார்த்து தற்போது வாடகைக்கு விட்டுள்ளேன். அதைத்தொடர்ந்து என் சொந்த உழைப்பில் ஒரு மனை நிலம் வாங்கியுள்ளேன். இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி என் வீட்டிற்கு எனது தந்தை தங்கவேல், அண்ணன் சுரேஷ், தம்பி சேகர், தாய் ஆகியோர் வந்து, தந்தை எழுதி கொடுத்த சொத்தையும் , நான் கிரையம் செய்த நிலத்தையும் அவர்களது பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என கூறினர்.
தனிபட்ட முறையில் நான் வாங்கிய சொத்தை மட்டும் எழுதி கொடுக்க முடியாது என கூறியதால், ஆத்திரமடைந்த தம்பி சேகர், அண்ணன் சுரேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து என்னை கழுத்தை நெரித்தனர். எனது சத்தம் கேட்டு வந்த எனது மனைவி, மாமியாரையும் அவர்கள் தாக்கினர்.
கொலை மிரட்டல்
மேலும், சொத்தை எழுதி கொடுக்காவிட்டால் என்னையும், எனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துவிட்டு, சொத்து சம்மந்தப்பட்ட பத்திரங்கள் வைத்திருந்த பெட்டியையும் அவர்கள் எடுத்துச் சென்று விட்டனர்.
எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், பாதுகாப்பு அளிக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களை அடித்து, கொலை மிரட்டல் விடுத்த எனது அண்ணன், தம்பி சேகர் ஆகியோர் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இதனை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சொத்து தகராறு: முதியவரை அடித்துக் கொன்ற உறவினர்கள்