ஈரோடு: அரச்சலூர் பகுதியில் அட்டூழியம் செய்து வரும் சிறுத்தையைக் கண்காணிக்க, வனத்துறை சார்பில் 9 இடங்களில் கண்காணிப்பு தானியங்கி கேமராக்கள், 3 இடங்களில் கூண்டுகள் ஆகியவை அமைக்கப்பட்டதை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், "ஈரோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட அரசுலூர், கொங்கம்பாளையம், அனுமன் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் மற்றும் கிராம மக்கள் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 13 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமரா மூலம் வனத்துறை கண்காணிப்பு செய்கின்றனர். மேலும் சிறுத்தை பிடிக்க நான்கு இடத்தில் கூண்டு அமைக்கும் நடவடிக்கையும் வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 3 பேர் கொண்ட 7 குழுவாக அமைத்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் சிறுத்தை நடமாடும் நேரங்களான அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு சிறுத்தையின் நடமாட்டம் தான் உள்ளது. அதுவும் அருகில் உள்ள கல்குவாரியில் கூட பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "காடுகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில், வனத்துறையினர் குறிப்பிடும் இடங்களில் மட்டும் விளக்குகளைப் போட வேண்டும். அப்படி குறிப்பிட்ட இடத்தில் மட்டும் விளக்குகளைப் போடுவது, சிறுத்தையை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு செல்ல உதவும். எனவே வனத்துறையின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஊருக்குள் புகுந்துள்ள சிறுத்தை, ஒரு கன்று குட்டி அதனை தொடர்ந்து மூன்று ஆடுகளைப் பிடித்துச் சென்றுள்ளது. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள கால்நடை இழப்புக்கு அரசு சார்பில், ஆடுகளை இழந்தவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், மாடுகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
பின்னர் அவிநாசி அத்திக்கடவு திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "கடந்த ஆட்சி காலத்தில் திட்டம் செயல்படுத்தும் இடங்களில், ஆற்றோரம் இருக்கும் நிலங்களைக் கையகப்படுத்தவில்லை. தற்போதைய ஆட்சி காலத்தில் தான் அந்த பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுள்ளது.
இன்னும் 120 குளங்களில் சோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் சோதனை செய்ய தற்போது போதிய தண்ணீர் வரத்து இல்லை. சோதனைகள் முடிந்தபின், திட்டம் சார்ந்த உத்தரவாதம் அளித்த பிறகு முதலமைச்சர் இந்த திட்டத்தைப் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைப்பார்" என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிதலமடைந்த தடுப்பணை: சொந்த செலவில் சீரமைக்கும் விவசாயிகள்..!