ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர்மன்ற கூட்டம் தலைவர் ஆர்.ஜானகி தலைமையில் நேற்று (டிசம்பர் 30) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 30 தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் லட்சுமணன், “நிர்மலா தியேட்டர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், தினசரி மார்க்கெட் கட்டுமான பணியில் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. பணிகள் துரிதமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய தலைவர், “ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் தினசரி மார்க்கெட் பணி துரிதமாக நடைபெறும்” என்று பதிலளித்தார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பாஜக உறுப்பினர் உமா, “நகர்மன்ற கூட்டத்தின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். விடுதலை தலைவர்கள் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய தலைவர் “அரசிடன் அனுமதி கிடைத்தவுடன் சிலை அமைக்கப்படும்” என்றார்.
அதன்பின் பேசிய பாமக உறுப்பினர் புவனேஸ்வரி, ”எங்கள் பகுதியில் தெருவிளக்கு எரியாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகையால் தெருவிளக்கை சரி செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இதற்கு தலைவர் “உடனடியாக தெருவிளக்கு சரி செய்யப்படும்” என்றார்.
அவரத்தொடர்ந்து பேசிய பாஜக உறுப்பினர் அர்விந்த், “வாடகைக்கு விடப்பட்ட சமுதாயக்கூடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்” என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய பாமக உறுப்பினர் திருநாவுக்கரசு, “பழுதான சாலைகளில் புனரமைப்பு பணியில் தரமற்றதாக உள்ளது” என்றார். இதனை கேட்ட தலைவர், “கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்” என கூறினார்.
இதையும் படிங்க: 'பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களிடம் திமுக தவறு செய்யக்கூடாது' - வி.பி.துரைசாமி