சென்னை கீழ்பாக்கம் பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருபவர் மோகன். அவரது மனைவி வித்யா. இவர்கள் இருவரும் நேற்று (ஜனவரி 9) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளனர். அதில்," ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோயில் அருகே தோட்டம் ஒன்றில் மோகனை கடத்தி ரூ. 1 கோடி பணம் கேட்டு, இரிடியம் மோசடி கும்பல் மிரட்டியது.
பணம் தருவில்லை என்றால் மோகன் கொலை செய்யப்படுவார் என மிரட்டியது மட்டுமின்றி, ரூ. 21 லட்சத்தை வங்கியில் செலுத்தியும் அவரை விடுவிக்கவில்லை. மோகன் உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவரை விரைவில் மீட்டுத் தருமாறு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சத்தியமங்கலம் காவல்ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை காவலர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், பண்ணாரிஅம்மன் கோயிலை அடுத்த ராஜன்நகர் அன்பு என்பவரின் தோட்டத்தில் 15 பேர் கொண்ட இரிடியம் மோசடி கும்பல் கடத்தி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அத்தகவலின் பேரில் அந்த இடத்தை சுற்றி வளைத்த காவல் துறையினர், பவானிசாகர் எரங்காட்டூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், பிரபு என்கிற அருண்குமார், அந்தியூர் சண்முகம் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். தப்பியோடிய ஆறு 6 பேரை தேடி வருகின்றனர். மேலும், அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த சென்னை வியாபாரி மோகன், அவரது நண்பர்கள் ராய் மற்றும் சுரேஷ் ஆகியோரை தனிப்படையினர் மீட்டு சத்தியமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
மோசடி கும்பலிடமிருந்து ரூ.9 லட்சம், 15 சரவன் நகை, வெள்ளி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: துபாய்க்கு லட்சக்கணக்கில் கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்: 5 பேர் கைது