ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் அடங்கிய குழு, கரோனா நோயிலிருந்து மக்களைத் தற்காத்துக்கொள்ளும் புதிய ஸ்மார்ட் கருவியைக் கண்டுபிடித்துள்ளது. மக்களின் சுகாதார நிலையை அறிந்து கொள்ள இந்தக் கருவி உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது கை கழுவுதல் முறையை ஆய்வு செய்து, இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்ப முறையில் கை கழுவுதலைக் கண்காணிக்கிறது. தானியங்கி கருவியான இது, கையில் உள்ள வைரஸ் குறித்த தகவல்களைக் தெரிவித்து வைரஸைக் கொல்வதற்கான வழிகாட்டு முறையையும் வழங்குகிறது.
சோப்பு, தண்ணீர் இல்லாமல் சென்சார் முறையில் சுகாதாரத்தை மேம்படுத்துவதால் இந்தக் கருவியை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிதி பிரயாஸ் திட்டத்திற்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் திட்ட மேம்பாட்டிற்காக ரூ. 2.75 லட்சம் நிதியுதவி வழங்கியும் பாராட்டியுள்ளது.
கல்லூரியின் ஹேக்கத்தான் ஆய்வக மாணவர்கள் கிஷேக்குமார், கே.ஜே.ஹேமங்முருகன், சரண்,கே.பரணி, வி.ஐஸ்வர்ய கீத்தனா ஆகியோர் இந்த கருவியை வடிவமைத்துள்ளனர். பரிசு பெற்ற மாணவர்களை கல்லூரித் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், கல்லூரி ஆலோசகர் விஜயகுமார் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர்.