ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த அலெக்ஸ் பால்ராஜ் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 6 பேருடன் காரில் ஈரோடு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார். இந்த கார் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு, 50 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.
இதைக்கண்ட சக வாகன ஓட்டிகள், உடனடியாக சத்தியமங்கலம் காவல்துறையினருக்கும், ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் வாகன ஓட்டிகள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் காரில் பயணித்தவர்களில் 3 பேருக்கு ரத்தக் காயமும், மற்றவர்களுக்கு சிராய்ப்பு காயமும் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சை பெற்ற பின், அனைவரும் கோவை தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துமனையில் தீ விபத்து - மருத்துவ தம்பதி உள்பட 5 பேர் பலி!