ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தோப்பூர் காலனி பகுதியில் 200 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா கேட்டு சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாலபாரதி, ‘நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு நடைபெற்றிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியை தொடர்ந்து கோவை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,600 பேர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மாணவர்களுக்கு தகுதியும், திறமையும் வேண்டும் என நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த போலி மருத்துவர்களாக மக்களின் நோய்களை எவ்வாறு குணப்படுத்துவர். அரசு மருத்துவக் கல்லூரிகளிலே இந்த நிலை என்றால், தனியார் கல்லூரிகளில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என கேள்வி எழுப்பினார்.
தேர்விற்காக விண்ணப்பித்தது ஒரு மாணவர், தேர்வெழுதியது ஒரு மாணவர், வெற்றி பெற்றவர் ஒரு மாணவர் என்ற நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய்கள் கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமின்றி, நீட் தேர்வை ரத்து செய்து ஏற்கனவே இருந்த பழைய முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெற மாநில அரசு ஆவண செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.