நாடு முழுவதும் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா அறிகுறிகள் உள்ள அனைவராலும் பரிசோதனைகள் மேற்கொள்ள முடிகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நோய்ப்பரவலின் தொடக்கத்தில், தொற்று பாதித்த முதல் மாவட்டமாக இருந்து பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் மாநகராட்சியின் துரித நடவடிக்கையின் காரணமாக, மிக விரைவிலேயே தொற்றில்லாத மாவட்டமாக மாறியது.
தமிழ்நாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து பிற மாநிலம், பிற மாவட்டத்திலிருந்து ஈரோட்டிற்குள் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மீண்டும் நோய்த்தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது வரை 1,000க்கும் மேற்பட்டவர்கள் தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், தொற்று அறிகுறி உள்ளவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறதா? அவர்களால் சுலபமாக பரிசோதனை செய்துகொள்ள முடிகிறதா? என்பது குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்து வருகிறது.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.என்.ராஜாவிடம் கேட்டபோது, " தற்போது கரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை அதிகமாக சென்றுகொண்டிருக்கிறது. சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. மாவட்டங்களில் அதிகமாக பரிசோதனைகள் செய்வதாக எடுத்துக்கொண்டாலும் மக்களிடையே தொற்றுப் பரவுவது நாள்தோறும் அதிகமாகிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சைகள் படுக்கையறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கரோனா நோய்த்தொற்று அதிகரித்து பின்பு படிப்படியாக குறையும் என்று பல வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்திய மருத்துவ சங்கமும் அதே கருத்தைத்தான் கொண்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் சமூகப்பரவல் இருக்கக்கூடிய வாய்ப்பும் காணப்படுவதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பரிசோதனைகள் முழுமையாக அரசால் மட்டுமே மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து தெரியாது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் பரிசோதனை மையங்களும் இணைந்துதான் சோதனைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பரிசோதனைகளில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு, இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை வைத்தது. ஒரு சில நேரங்களில் பரிசோதனை முடிவுகள் வர காலதாமதம் ஆகிறது. எனவே, பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும். தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு வர, மேலும் சில மாதங்கள் ஆகலாம். இந்த நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது மட்டுமே. அறிகுறி இல்லாமல், இந்த நோய்ப்பரவி வருவதால், பொதுமக்கள் சிறிய அளவில் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டாலும் பரிசோதனை செய்வது மிக அவசியம்.
மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், மருத்துவர் பரிந்துரை இருந்தும் பரிசோதனை செய்யாமல் இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஈரோடு மாவட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், பரிசோதனை மையங்கள் குறைந்த அளவிலேயே இருக்கின்றன" என்றார்.
இத்தகைய சிக்கல்கள் குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் பேசும்போது, " ஈரோடு மாநகராட்சியை பொறுத்தவரையில் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவருக்கும் உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு உள்ளவர்கள் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒருவருக்கு நோய்த்தொற்று இருக்கும்பட்சத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறோம்.
பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நடமாடும் பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாநகராட்சியின் ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவர் குழுவுடன் சென்று மக்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு காய்ச்சல், தலைவலி இருந்தாலும் நோய் அறிகுறிகள் இருந்தாலும் உடனே ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகள் சிறப்பாக கவனிக்கப்படுகிறார்கள்" என்றார்.
"ஈரோட்டில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும் அரசும் எல்லோருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்கள். ஆனால், அறிகுறி இருக்கும் அனைவருக்கும் டெஸ்ட் எடுக்கப்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அறிகுறியாக சொல்கிறார்கள். தற்போது மழைக்காலம் என்பதால், இயற்கையாகவே சிலருக்கு இருமல், தும்மல் இருக்கும். இதை மக்கள் பயந்து கரோனா இருக்குமோ என்று பரிசோதனைக்குச் செல்கிறார்கள்.
மருத்துவர்களால் இதற்கெல்லாம் கரோனா டெஸ்ட் எடுக்க முடியாது. அறிகுறி உள்ள அனைவருக்கும் டெஸ்ட் எடுக்கும் சாத்தியக்கூறுகள் குறைவுதான். ஆனால், அதிக அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதித்தப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக டெஸ்ட் எடுக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சி ஆரம்ப கட்டத்தில் மிகச்சிறந்த தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு நோய்ப்பரவலைக் குறைத்து. தற்போதும் அதேபோன்று தான் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கரோனாவில் இருந்து முழுமையாக மீள மக்களின் ஒத்துழைப்பு அரசுக்குத் தேவை" என சமூக ஆர்வலரும் உணர்வுகள் அமைப்பின் தலைவருமான மக்கள் ராஜன் கூறுகிறார்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் ஏற்படுத்திவரும் குழப்பங்களை அரசால் பட்டியலிடவே முடியாது - கனிமொழி