தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஆறுமாதங்களாக பல்வேறு கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அதில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.
ஆனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பொதுப்போக்குவரத்து மற்றும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று முதல் பொதுப்போக்குவரத்து மற்றும் வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து ஈரோட்டில் சுமார் 150க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் மற்றும் தூரப் பேருந்துகள் காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
முதல் நாளான இன்று உள்ளூரில் தினக்கூலிக்கு செல்லும் பொதுமக்கள் மட்டுமே குறைந்த அளவு வந்திருந்தனர். இந்நிலையில் குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்ல குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டதால் அதற்காக காத்திருந்த பயணிகள் தங்களது ஊர் செல்ல வரும் பேருந்து வநதபோது அவசர அவசரமாக வண்டியில் ஏற முற்பட்டனர்.
இதனால் சென்னிமலை செல்லும் 11ஆம் எண் கொண்ட பேருந்தில் பயணி ஒருவர் ஏறும்போது பேருந்தின் கடையில் இருந்த ஜன்னலோர கண்ணாடி உடைந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த நடத்துனர் மற்றும் பயணிகளிடையே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்துகள் இயக்கப்பட்ட முதல் நாளே பேருந்தின் ஜன்னலோர கண்ணாடி உடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.