தர்மபுரி மாவட்டம் போளயம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (42). இவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி அம்பிகா (35). இவர்களுக்கு மனோஜ் (13), மதன்குமார் (6) என இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் பள்ளியில் படித்துவந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜன. 31) சிவக்குமார் தனது இருசக்கர வாகனத்தில், இரு மகன்களையும் ஏற்றிக்கொண்டு தர்மபுரியிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஈரோடு பவானி மேட்டூர் சாலை குருப்பநாயக்கன்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.
இதில், நிலைதடுமாறி மூன்று பேரும் சாலையில் விழுந்தனர். அதேநேரத்தில் எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிவக்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதில், சிறுவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மனோஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்கு ஈரோட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட மதன்குமாரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பவானி காவல் துறையினர், விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகன ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: நடன மேடையில் தீ விபத்து