ஈரோடு கருங்கல்பாளையம் அருகேயுள்ள கமலாநகரைச் சேர்ந்தவர்கள் சங்கர், தினேஷ். சகோதரர்களான இருவரும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இதில், மூத்த மகன் சங்கருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இளையவர் தினேஷுக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் பெண் தேடி வந்தனர். சகோதரர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.
இதில் சங்கருக்கு மதுப்பழக்கம் உள்ளது. இவர் நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவி, பெற்றோருடன் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் (செப்.,11) மதுபோதையில் வீட்டுக்கு வந்த சங்கர் தகராறு செய்தார். இதனிடையே வாக்குவாதம் முற்றவே தந்தை மனோகரனை அடித்தார். இதனைப் பார்த்த சங்கரின் தம்பி தினேஷ் தனது கண் முன்னால் தந்தையை அடித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அண்ணனைத் தாக்கினார்.
இதனால் காயமடைந்த சங்கர், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று இன்று (செப்.,13) காலை வீடு திரும்பினார். தம்பி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த சங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு தினேஷை குத்தினார். இதை சற்றும் எதிர்பாராத தினேஷ் பலத்த ரத்தக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரத்தக்காயங்களுடன் வீழ்ந்து கிடக்கும் மகனைக் கண்டு பெற்றோர் அலறவே அக்கம்பக்கத்தினர் சப்தம் கேட்டு வந்தனர். தப்பியோட முயன்ற அண்ணன் சங்கரை சுற்றி வளைத்துப் பிடித்து கட்டி வைத்தனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சங்கரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். உயிரிழந்த தினேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: நெல்லையில் திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டி படுகொலை!