ஈரோடு : அந்தியூர் அருகே ஒரிச்சேரி புதூர் பகுதியில் ஓம் காளியம்மன் கோயில் உள்ளது. இன்று காலை வழக்கம் போல் கோயிலை திறக்க சென்ற பூசாரி கோயில் உள்ளே சென்று பார்த்தபோது கோயில் பூட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து கோயில் நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் கோயில் நிர்வாகிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.
இதற்கிடையே அதே பகுதியில் உள்ள சின்ன ஓம் காளியம்மன் கோயில், மற்றும் ஒரிச்சேரிப் பகுதியில் அமைந்துள்ள இந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் பூட்டு மற்றும் உண்டியல் ஆகியவை உடைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து அந்த கோயில்களுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள கருவறையில் அம்மன் கழுத்தில் இருந்த நகைகளைக் கழட்டி பார்த்துள்ளனர். அவை கவரிங் நகை என்பதால் கருவறை வாசலின் முன்பே வைத்துவிட்டு கொள்ளையர்கள் சென்றுவிட்டனர் .
தொடர்ந்து அருகிலுள்ள விவசாயத்தோட்டத்தில் கரும்பு பயிர்களுக்கு மத்தியில் கோயில் உண்டியல் மற்றும் பூட்டு திருடர்கள் பயன்படுத்திய ஸ்க்ரூட்ரைவர் உள்ளிட்டவை கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓம் காளியம்மன் கோயில் உண்டியலில் 1 லட்சம் ரூபாய் காணிக்கை இருக்கக்கூடும் எனவும்; மற்ற இரண்டு கோயில்களிலும் சேர்த்து சுமார் 5000 ரூபாய் இருக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து மூன்று கோயில்களில் கொள்ளை சம்பவம் குறித்து தொடர்பாக ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து மூன்று கோயில்களில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்து இருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முடிச்சூரில் கோயில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்..