சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து அலைபேசியின் மூலம் தனக்கு பெருந்துறை டாஸ்மாக்கில் கூடுதலாக மது பாட்டில்கள் தர மறுப்பதாகவும், அவ்வாறு தான் கேட்ட மது பாட்டில்களைத் தர மறுத்ததால் பெருந்துறை காவல் நிலையத்தையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் பணியிலிருந்த காவலர்கள், அலைபேசி எண்ணைக் கொண்டு, பெருந்துறையைச் சேர்ந்த கெளரிசங்கர் என்பதையும், கடும் மதுபோதையினால் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையும் தெரிந்து கொண்டனர்.
பின்னர் இத்தகவலை பெருந்துறை காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். தகவலின் பேரில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையினர் கொடுத்த முகவரிக்குச் சென்று அங்கிருந்த கெளரிசங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர் அரசு மதுபான கடையில் வழக்கமாக வழங்கும் அளவை விடவும் கூடுதலாக கேட்டதால் தரமறுத்த டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும், இதனால் ஆத்திரமடைந்த அந்த மதுபோதை இளைஞர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.