ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாய், சைல்ட் ஹெல்ப்லைனுக்கு புகார் தெரிவித்ததையடுத்து, பவானி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெரியசாமி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் கடந்த மாதம் 29ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் பெரியசாமி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெரியசாமியை கைது செய்ய தாமதம் செய்யும் காவல் துறையினரைக் கண்டித்து பாஜக கட்சியின் மகளிர் பிரிவினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனு வழங்கினர்.
இது குறித்து அவர் கூறுகையில், "பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வரும் சூழலில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்தும், இதுவரை கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது. புகார் கொடுத்ததால் சிறுமியின் பெற்றோருக்கு காந்திய மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுபோன்ற செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகவுள்ள பெரியசாமியை கைது செய்ய வேண்டும்" என்றனர்.