நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க வந்துள்ள அக்கட்சியின் மூத்தத் தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தைப்பூசத் திருவிழாவிற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் கோரிக்கை வைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
இந்து மதத்தின் பிரச்னைகளை மற்ற மதத்தினர் பேசுவதற்கு உரிமை இல்லை. சைமன் என்ற பெயரை வைத்துள்ள சீமான், மக்களை ஏமாற்றவும் தனது அரசியில் நாடகத்திற்காகவும் இதுபோன்ற கோரிக்கையை வைத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காது” என்றார்.
ஏழு தமிழர் விடுதலை குறித்து பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, ராஜீவ் கொலை வழக்கை சாதாரண வழக்காக பார்க்க முடியாது. இவ்வழக்கில் முந்தைய அரசு எந்த நிலைப்பாட்டில் உள்ளதோ அதே நிலைப்பாட்டில்தான் இப்போதைய அரசும் உள்ளது. சிறையில் உள்ள எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்தபோது இது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர எப்போது முடிவு எடுக்கவேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஆளுநர் முடிவு எடுக்கும்வரை பொறுத்திருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் விஜய் உள்ளிட்டவர்களிடம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அதிமாகவே பணம் சிக்கியுள்ளது. வருமான வரித்துறையினர் அரசியல் பின்னணியில் இயங்குவதில்லை. வருமான வரித்துறையினர் அவர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியுள்ளனர்.
தேசிய அளவில் ஒரு மட்டமான கட்சியின் தலைவர் என்றால் அது ராகுல் காந்திதான். பிரதமர் இருக்கைக்கு என்று ஒரு மரியாதை உள்ளது. மக்களவையில் பிரதமர் மோடியின் எதிரே நின்று திருடன் என்ற வார்த்தையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்தியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவிற்கு கூடிய விரைவில் மாநில தலைவர் நியமிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏழு பேர் விடுதலை... ஆளுநர் அலுவலகம் கண்ணாமூச்சி விளையாடுகின்றன - பாலகிருஷ்ணன்