ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையில், கடந்த சில வாரங்கள் முன்பு பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி 85 அடியாக இருந்த பவானிசாகர் அணை நீர்மட்டம், தொடர் நீர்வரத்து காரணமாக தினமும் இரண்டு அடி உயர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி 102 அடியை எட்டியது. இது வரலாற்றில் 19ஆவது முறையாக 102 அடியை எட்டியுள்ளது.
அணையில் போதுமான நீர் இருப்பு காரணமாக தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 1, 400 கனஅடி நீரும் கீழ்பவானி பாசன வாய்க்கால் இரண்டு ஆயிரம் கன அடி நீரும் என மொத்தம் மூன்று ஆயிரத்து 400 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
தற்போது அணையின் நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளது.
அணையின் இன்றைய(ஆக.19) நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 101.80 அடியாகவும் 981 டிஎம்சி நீர் வரத்து அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மூன்று ஆயிரத்து 400 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு 30.15 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.