ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாகவும் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணை முழுகொள்ளளவை எட்டியது. தெங்குமரஹாடா மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் மாயாற்றில் கலப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பில்லூர் அணையில் இருந்து வரும் உபரிநீரும் மாயாற்றில ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் அணைக்கு விநாடிக்கு 38 ஆயிரத்து 471கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி 85.71 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தினமும் 2 அடி உயர்ந்து இன்று (ஆகஸ்ட் 6) மாலை 93 அடியை எட்டியது. பில்லூரில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் பவானிஆறு வழியாக பவானிசாகர் அணைக்கு வந்து சேருவதால் தாழ்வான பகுதியில் உள்ள கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 105 அடி நீர்மட்டம் கொண்ட பவானிசாகர் அணை, முழுகொள்ளளவை எட்டுவதற்கு 12 அடி உள்ள நிலையில், பொதுப்பணித்துறை அலுவலர்கள் அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93 அடியாகவும், நீர் வரத்து 38 ஆயிரத்து 471 கன அடியாகவும், கால்வாய் வாய்க்காலுக்கு நீர் வெளியேற்றம் 900 கனஅடியாகவும், நீர்இருப்பு 23.55 டிஎம்சியாக உள்ளது.